"வன விலங்குகளுக்கும் சுதந்திரமாக நடமாட சட்ட உரிமை உள்ளது"-ஈக்குவடார் உச்சநீதிமன்றம் தீர்ப்பு
வன விலங்குகளுக்கும் மனிதர்களை போல சுதந்திரமாக நடமாட எல்லா சட்ட உரிமைகளும் உள்ளதாக ஈக்குவடார் நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
18 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மாத குட்டியாக இருந்த குரங்கு ஒன்றுக்கு எஸ்ட்ரெலிட்டா என பெயர் சூட்டி ஆனா பியட்ரிஸ் என்ற பெண் செல்ல பிராணியாக வளர்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டில் வனவிலங்குகளை வீட்டில் வளர்ப்பது சட்டவிரோதம் என கூறி அதிகாரிகள் குரங்கை விலங்குகள் பூங்காவிற்கு மாற்றினர்.
பூங்காவில் இருந்த அந்த குரங்கு ஒரு மாதத்தில் உயிரிழந்த நிலையில், உரிமையாளரிடம் வளரும் உரிமையை இழந்ததால் குரங்கு இறந்ததாக அறிவிக்கக்கோரி ஆட்கொணர்வு மனு ஒன்றை ஆனா பியட்ரிஸ் தாக்கல் செய்தார். அதில் தீர்ப்பளித்த அந்நாட்டின் உச்சநீதிமன்றம், வனவிலங்கு பூங்காவில் வைத்ததன் மூலம் குரங்கின் உரிமை பறிக்கப்பட்டது உரிமை மீறல் தான் எனவும், அதே சமயம் 18 ஆண்டுகளுக்கு முன் அதனை வனத்தில் இருந்து அழைத்து வந்ததும் உரிமை மீறல் தான் எனவும் தெரிவித்தது.
வேட்டையாடப்படாமல், கூண்டில் அடைக்கப்படாமல், கடத்தப்படாமல்,விற்கப்படாமல் தங்களை பாதுகாத்து கொள்ள வன விலங்குகளுக்கு அனைத்து சட்ட உரிமைகளும் உள்ளதாகவும் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
Comments